ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழும் மக்கள் போராட்டங்கள் - நா.யோகேந்திரநாதன்!
கடந்த மார்ச் மாதத்தின் இறுதி நாளன்று மாலை நுகேகொடை மீரிஹான பகுதியில் அமைந்திருந்த ஜனாதிபதி இல்லத்துக்கருகில் கூடியதுடன் ஜனாதிபதிக்கும் அரசாங்கத்துக்குமெதிராகக் கோஷங்களை முழங்கி பெரும் ஆர்ப்பாட்டத்திலும் பொது மக்கள் ஈடுபட்டனர். ஜனாதிபதியின் இல்லத்தை நோக்கிக் கற்கள் வீசப்பட்டதாகவும் அங்கு பெரும் பதட்டமான சூழ்நிலை நிலவியதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளன. அந்த நிலையில் அங்கு பொலிஸார், சிறப்பு அதிரடிப் படையினர், இராணுவத்தினர் இறக்கப்பட்டுப் பொது மக்கள் மீது நீர்த்தாரை, கண்ணீர்ப் புகை, குண்டாந்தடியடி என்பன பிரயோகிக்கப்பட்டு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாகவும் மேற்படி சம்பவத்தில் பெண்கள் உட்பட 53 பேர் கைது செய்யப்பட்டதாகவும் மேலும் சிலர் அடையாளம் காணப்படுவதற்காகத் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது. மேலும் கல்கிசை, மொறட்டுவ போன்ற பகுதிகளிலும் எதிர்ப்பு நடவடிக்கைகளும், வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன.
எப்படியிருந்த போதிலும் இலங்கையின் வரலாற்றில் முதன்முதலாக பொது மக்களால் ஒரு ஜனாதிபதியின் இல்லம் சுற்றி வளைக்கப்பட்டு, கல்வீச்சுக்கு உட்படுத்தப்பட்டது என்பது இங்கு கவனிக்க வேண்டிய விடயமாகும். அதிலும் கடந்த 2 வருடங்களின் முன்பு 69 இலட்சம் வாக்குகளால் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட கோத்தபாய ராஜபக்ஷவை 2 வருடத்தில் பதவியை விட்டு வெளியேறும்படி கோரி மக்கள் போராட்டம் நடத்தியுள்ளனர்.
அதுமட்டுமின்றி ஏப்ரல் 3ம் நாள் அரசாங்கத்தை எதிர்த்து ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் நாடு பரந்த அளவில் எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டதுடன், 2ம் திகதி மாலை 6.00 மணி தொடக்கம் 4ம் திகதி அதிகாலை 6.00 மணிவரை ஊடரங்குச் சட்டம் அமுலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி முகநூல், வாட்ஸ்அப், ருவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களும் குறித்த நாட்களுக்கு முடக்கப்பட்டு விட்டன.
எப்படியிருந்தபோதிலும் மீரிஹானவில் இடம்பெற்ற மக்களின் எதிர்ப்புப் போராட்டத்தை தனி ஒரு சம்பவமாகப் பார்த்துவிடமுடியாது. கடந்த சில மாதங்களாக ஆசிரியர்கள், மருத்துவர்கள், தாதியர்கள் உட்பட்ட சுகாதார சேவைப் பணியாளர்கள், தொடரூந்துப் பொறியியலாளர்கள், சாரதிகள், காப்பாளர்கள் உட்பட்ட பணியாளர்கள் எனப் பல்வேறு தரப்பினரும் நியாயபூர்வமான கோரிக்கைகளை முன் வைத்துத் தொழிற்சங்கப் போராட்டங்களை மேற்கொண்டனர்.
அடுத்து சமையல் எரிவாயு, பால்மா, அரிசி, பருப்பு உட்பட அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டது. இறக்குமதியாளர்கள், பெரும் வர்த்தகர்களின் கோரிக்கைகளையடுத்து அத்தியாவசியப் பொருட்களின் நிர்ணய விலைகள் நீக்கப்பட்டு அவற்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டன. இலங்கை நாணயத்தின் பெறுமதி படுமோசமாக வீழ்ச்சியடைந்த நிலையில் எரிபொருளின் விலையும் வகை தொகையின்றி அதிகரித்தது. எரிவாயு உட்பட்ட அத்தியாவசியப் பொருட்கள் 'டொலர்' கையிருப்பு இன்மையால் கப்பல்களிலிருந்து இறக்கப்படாமல் துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன.
நாடு முழுவதும் எரிவாயு, எரிபொருள் என்பனவற்றுக்கான வரிசைகள் நீண்டு போய்க் கிடக்கின்றன. சில இடங்களில் வரிசையில் நின்றவர்கள் மரணித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு மக்கள் மீது தாங்க முடியாதளவுக்கு சுமைக்கு மேல் சுமைகள் சுமத்தப்பட்டு நாடு பட்டினிச் சாவு நோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் போராட்டங்களில் இறங்கினர்.
இவ்வாறு சில மாதங்களாகத் தொழிற்சங்கப் போராட்டங்கள், ஏனைய மக்கள் போராட்டங்கள் என மக்கள் மத்தியில் உருவாகி விரிவடைந்த எதிர்ப்பலையின் தொடர்ச்சியே மீரிஹானவில் ஜனாதிபதி இல்லத்தைச் சுற்றி இடம்பெற்ற போராட்டமாகும். இதுவரை இடம்பெற்ற போராட்டங்கள் சட்டபூர்வமான வழிமுறைகளுடாகவே இடம்பெற்றன. அதுமட்டுமின்றி போராட்டங்களில் ஈடுபட்டவர்கள் தங்கள் சொந்தக் கோரிக்கைகளையே முன் வைத்தனர்.
ஆனால் மீரிஹான போராட்டம் அந்த எல்லையைத் தாண்டி அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்து விட்டது. அதாவது அரசாங்கமும் ஜனாதிபதியும் பதவி விலகவேண்டும். இனவாத, மதவாதத்தை உருவாக்கிய குடும்ப ஆட்சியை விரட்டவேண்டும், மக்கள் முகம் கொடுக்கும் நெருக்கடிகளுக்கு உடனடியாகத் தீர்வு காணப்படவேண்டும் போன்ற பொதுக் கோரிக்கைகள் முழக்கப்பட்டன.
மேலும் ஜனாதிபதி இல்லத்துக்குக் கல்வீச்சு, இராணுவப் பேரூந்து எரிப்பு, பொலிஸ் வாகனங்கள் சேதம் போன்ற வன்முறைகளும் இடம்பெற்றுள்ளன.
இந்த நிலையில் பொதுமக்கள் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் 2ம் நாள் மாலை 6.00 மணியிலிருந்து 36 மணி நேர ஊரடங்கு உத்தரவு அமுலுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. மேலும் முகநூல், டுவிட்டர், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டு விட்டன.
ஒரு நாட்டிலோ ஒரு சமூகத்திலோ ஏன் ஒரு நிறுவனத்தில்கூட பாரதூரமான பிரச்சினைகள் எழும்போது அவை இரு விதங்களில் கையாளப்படுகின்றன. ஒன்று - பிரச்சினையின் மூலவேரைக் கண்டறிந்து அதைத் தீர்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வது, பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கைகளை நியாயபூர்வமாக அணுகி ஒத்துழைப்புடன் நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளாகும். மற்றது - அதிகார பலத்தை பாவித்து அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்து விடுவதன் மூலம் தற்காலிக அமைதியை ஏற்படுத்துவது.
தற்சமயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை, ஊரடங்கு அமுல், சமூக வலைத்தளங்களின் முடக்கம் என்பன, இன்றைய ஆட்சியாளர்கள் கடுமையான ஒடுக்குமுறை மூலம் இன்றைய நெருக்கடிக்குத் தீர்வு காண முயற்சிக்கின்றனரா என்ற கேள்வியை எழுப்புகின்றன. ஆனால் இலங்கையின் ஆட்சியாளர்கள் இரண்டாவது வழிமுறை மூலம், அதாவது ஒடுக்குமுறை மூலம் தீர்வு காண்பதற்கான முடிவை எடுத்துவிட்டனர் என்பது தெளிவாகிறது.
இப்படியான பெரும் பொருளாதார நெருக்கடி இலங்கைக்கு ஏற்பட்டமையானது இதுதான் முதல் தடவையல்ல. ஏற்கனவே இலங்கை இருதடவைகள் இப்படியான நெருக்கடிக்கு முகம் கொடுத்ததுடன் இது மூன்றாவது தடவையாகும்.
முதல் இரு தடவைகளிலும் இந்த நெருக்கடிகள் இரு வழிமுறைகள் மூலம் முகம் கொடுக்கப்பட்டது.
1950ஆம் ஆண்டு காலப்பகுதியில்எ இரண்டாம் உலகப் போர் முடிவடைந்த பின்பு ஒரு பெரும் பொருளாதார நெருக்கடி முழு உலகையுமே உலுக்கியது. அது இலங்கையையும் விட்டு வைக்கவில்லை. அந்த நிலையில் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி என்பனவற்றின் ஆலோசனையின் பேரில் நெருக்கடியின் சுமைகள் மக்கள் மேல் சுமத்தப்பட்டன. அதற்கெதிராக நாடு பரந்த போராட்டங்கள் வெடித்தன. அவை கடுமையான ஒடுக்குமுறை மூலம் அடக்கப்பட்டன.
அதாவது இலங்கை முகம் கொடுத்த முதலாவது பொருளாதார நெருக்கடி இராணுவ வன்முறை மூலம் ஓரளவு தீர்வுக்குக் கொண்டு வரப்பட்டது. ஆனால் அதன் பின்பு 1956ம் ஆண்டு இடம்பெற்ற தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை இழந்து படுதோல்வியடைந்தது.
இரண்டாவது - பொருளாதார நெருக்கடி 1972 – 1977 காலப்பகுதியில் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க ஆட்சிக் காலத்தில் ஏற்பட்டது.
அப்படியொரு நெருக்கடி அக்காலப்பகுதியில் ஏற்பட்டது என்று சொல்வதைவிடத் திட்டமிட்ட வகையில் அமெரிக்கா உட்பட மேற்கு நாடுகளால் உருவாக்கப்பட்டது என்பதே பொருத்தமானதாகும்.
1970ல் திருமதி ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கம் லங்கா சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றைப் பங்காளிகளாகக் கொண்டு அமைக்கப்பட்டது. ஆட்சியை ஏற்றவுடனேயே பல நெருக்கடிகளுக்கு முகம் கொடுக்கவேண்டி வந்தது. சர்வதேச அளவில் மேற்கு நாடுகள் பிரகடனப்படுத்தாத பொருளாதாரத் தடையை மேற்கொண்டன. பி.எல்.480 ன் கீழ் வழங்கப்பட்ட கோதுமை நிறுத்தப்பட்டது. உள்ளுரில் சம்பள உயர்வு கோரி தொழிற்சங்கப் போராட்டங்கள் இடம்பெற்றன. 1971ல் இடம்பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சியைக் கட்டுக்குள் கொண்டு வரவும் சிரமங்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. எனினும் அரசாங்கம் முடிந்தளவு உணவு, உடை போன்ற விடயங்களில் இறக்குமதிகளுக்கு கட்டுப்பாடு விதித்து சுயதேவைப் பூர்த்தியை நோக்கிய வேலைத் திட்டங்களை வகுத்தது. ஆரம்பத்தில் இம்முறையால் ஒரு பகுதி மக்கள் பாதிக்கப்பட்டாலும் விவசாயிகள் உட்பட இன்னொரு பகுதி மக்களின் வாழ்வு செழிப்படைந்தது. அரசாங்கத்தின் தன்னிறைவுப் பொருளாதாரக் கொள்கைக்கு எதிராக ஜே.ஆர்.ஜயவர்த்தன தலைமையில் பல போராட்டங்கள் நடத்தப்பட்டபோதிலும் அவை பெரிதும் வெற்றியளிக்கவில்லை. அக்காலப்பகுதியில் அணிசேரா நாடுகள் ஒரு பலம்பெற்ற அமைப்பாக விளங்கிய நிலையில் அதில் இலங்கை முக்கிய பங்காளியாக விளங்கிய நிலையில் மேற்கு நாடுகளால் இலங்கை மீது மேற்கொள்ளப்பட்ட அழுத்தங்களால் பெரிதாக எதையும் சாதித்துவிட முடியவில்லை.
காலப் போக்கில் இலங்கை தன்னிறைவுப் பொருளாதாரத்தை நோக்கி வேகமாக முன்னேறியதுடன் இலங்கையின் நாணயப் பெறுமதி இந்தியாவின் நாணயப் பெறுமதியைவிட அதிகமிருக்கும் வகையில் பொருளாதார ஸ்திரம் உருவாகியது.
விவசாய உற்பத்தி வளர்ச்சி, சிறுகைத்தொழில் வளர்ச்சி, காணி சீர்திருத்தம், பெருந்தோட்டங்கள் தேசிய மயம் எனப் பல்வேறு முற்போக்கான அம்சங்களை முன்னெடுத்ததன் மூலம் அப்போதையை பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டது.
இந்த இரண்டாவது பொருளாதார நெருக்கடி, மக்கள் மீதான ஒடுக்குமுறை நடவடிக்கைகளோ, வன்முறைப் பிரயோகங்களோ இன்றி மக்களின் ஒத்துழைப்புடன் படிப்படியாக வெற்றி கொள்ளப்பட்டது என்பது முக்கிய விடயமாகும்.
இந்த இரு பொருளாதார நெருக்கடிகளும் எவ்வாறு உருவாகியது, அவற்றின் பின்னணியில் செயற்பட்ட சக்திகள் எவை, எவ்வாறு அவை வெற்றி கொள்ளப்பட்டன போன்ற விடயங்கள் ஆழமாக ஆராயப்பட்டு அவற்றிலிருந்து கற்றுக்கொண்டிருந்தால் இன்றைய நெருக்கடிக்குள் அகப்பட்டுத் திக்குமுக்காட வேண்டிய நிலை எழுந்திராது.
ஆனால் இன்னும்கூட அதிகார பீடத்தினர் அது பற்றிச் சிந்திப்பதாகத் தெரியவில்லை.
ஊரெங்கும் திரிந்து கடன் வாங்கி உலையில் அரிசி போடும் மூலோபாயம் நாட்டை எங்கு கொண்டு போய்த் தள்ளிவிடும் என்பது சொல்லித்தான் தெரிய வேண்டுமென்பதில்லை.
எப்படியிருப்பினும் இந்த மூன்றாவது பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டெழுமா என்ற கேள்விக்கு முடியும் என்ற பதிலே மக்களின் எதிர்பார்ப்பாகும். ஆனால் அப்படியான பதிலுக்கான அறிகுறி எதுவும் இதுவரைத் தென்படவில்லை.
ஆனால் கடன் மேல் கடன் வாங்கி செலவினங்களை ஈடுகட்டும் ஒரு வழிமுறையே இப்போது கையாளப்படுகின்றது. இது எவ்வளவு தூரம் நாட்டை அதலபாதாளத்திற்குக் கொண்டு செல்லும் என்பதை ஆட்சியாளர்கள் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை.
ஆனால் நெருக்கடிமேல் நெருக்கடிகள் மக்களை கிளர்ந்தெழ வைக்கும் நிலைக்குத் தள்ளுகின்றன என்பது மட்டும் மறுக்கமுடியாத உண்மையாகும்.
தொடரும்...
அருவி இணையத்துக்கா :- நா.யோகேந்திரநாதன்.
Category: கட்டுரைகள், சிறப்பு கட்டுரை
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, மகிந்த ராசபக்ச, இலங்கை